புலிகளை பாதுகாக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகளை பாதுகாக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2021-09-27 19:58 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகளை பாதுகாக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. 
சைக்கிள் பேரணி 
 ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மூலம் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “புலிகளுக்கான இந்தியா” என்ற தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கலெக்டர் மேகநாதரெட்டி ெதாடங்கி  வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 
இந்தியாவில் புலிகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது 5-வது புலிகள் காப்பகமாகும்.  ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமானது, புலிகள் மட்டுமல்லாமல், தண்ணீரை ஆதாரமாக கொண்டு அறிவிக்கப்பட்ட முதலாவது புலிகள் காப்பகம் என்ற சிறப்புக்கு உரியதாகும்.
வனத்துறையின் முயற்சியால் தற்போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அனைவரும் தங்களால் முடிந்த அளவு இயற்கையை பலப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தலுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
சான்றிதழ் 
வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த பேரணி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தொடங்கிய பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் முடிவடைகிறது.
முன்னதாக வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் வனத்துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள் 7 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இதில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் (மதுரை மண்டலம்) தீபக் எஸ்.பில்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், உதவி வன பாதுகாவலர் (களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்) ராதை, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையாளர் மல்லிகா, தாசில்தார் ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்