புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,044 பேர் கைது

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,044 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-27 19:51 GMT
புதுச்சேரி, செப்.28-
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,044 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.என்.டி.யு.சி.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று தொழிற்சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர். புதுவையிலும் இந்த போராட்டம் நடந்தது. 
இந்திராகாந்தி சதுக்கம் அருகே நேற்று காலை ஐ.என்.டி.யு.சி. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். 
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர். 
மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 
ஏ.ஐ.டி.யு.சி.
அண்ணா சாலை- நேரு வீதி சந்திப்பில் காமராஜர் சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சந்திரசேகர், தயாளன், சேகர், முத்துராமன் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
ராஜீவ்காந்தி சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் பெருமாள், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எழிலன், முரளி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை இளங்கோ, இளையராஜ், முற்போக்கு மாணவர் கழக    நிர்வாகிகள்    தமிழ் வாணன், ஆதிரை, இந்திய மாணவர் சங்கம் ஜெயபிரகாசம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆனந்த், சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது.
தி.மு.க.
அண்ணா சிலை அருகே மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். 
சி.ஐ.டி.யு. சார்பில் நடந்த போராட்டத்தில் முருகன், சீனு,   பிரபுராஜ், மதி, குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யு. நிர்வாகிகள் பாலசுப்ரமணி, மோதிலால், புருஷோத்தமன், எல்.எல்.எப் செந்தில், செல்வநாதன், ம.தி.மு.க. தொழிற்சங்கம் வேதாவேணுகோபால், கபிரியேல், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் சங்கரன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மாணவர் கூட்டமைப்பு
மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமையில் பல்வேறு இயக்கங்கள், அமைப்பு நிர்வாகிகள் ஆதரவாக மறைமலையடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 12 இடங்களில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள், 80 பெண்கள் உள்பட 1,044 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்