வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்- மு.க.ஸ்டாலினிடம், எம்.எல்.ஏ. கோரிக்கை

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

Update: 2021-09-27 19:42 GMT
இட்டமொழி:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
அதில் கூறி இருப்பதாவது:- தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகளை இந்த ஆண்டுக்குள் விரைந்து நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட நாங்குநேரி தொழிற்பூங்காவை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தென் மாவட்ட மக்கள் அனைவருமே பெரிதும் பயன்பெறுவார்கள். அதேபோல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை விளையாட்டு கிராமமும் முழுமையான செயல்பாடுகளின்றி கிடக்கிறது. அந்த விளையாட்டுக் கிராமத்தையும் மேம்படுத்தி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்