கோவில் திருவிழா முன்விரோதத்தில் கொலை சம்பவம்: வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
கோவில் திருவிழா முன்விரோதத்தில் கொலை சம்பவத்தில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
புதுக்கோட்டை:
கோவில் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புலியூரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது25). ஊரில் செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவில் சாமி முன்பு எல்லோரும் ஆடி வந்த போது அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (29) கொண்டு வந்த தேங்காய் பழத்தட்டை பரமேஸ்வரன் தட்டிவிட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கு விரோதம் ஏற்பட்டது. பழத்தட்டை தட்டிவிட்டதை அபசகுணம் என்று சுதாகர் கருதினார். அன்றைய தினம் புலியூர் சங்கிலி கருப்பு கோவில் முன்பு நின்று கொண்டிருந்த பரமேஸ்வரனை, சுதாகர் தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு வந்து கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் சுயநினைவை இழந்து இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி குருமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதில் சுதாகருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றம் நிரூபிக்கப்படாததால் மற்ற 3 பேரை அவர் விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கீரனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுதாகரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர்.