100 நாள் வேலை திட்டத்தில் ஒரு மாதமாக ஊதியம் வழங்கவில்லை; கலெக்டர் அலுவலகத்தில் புகார்
100 நாள் வேலை திட்டத்தில் ஒரு மாதமாக ஊதியம் வழங்கவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கரூர்,
புகார் பெட்டி
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊதியம் வழங்கவில்லை
கடவூர் தாலுகா, தேவர்மலை கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். தற்போது எங்களுக்கு ஒரு மாத காலம் ஆகியும் எங்கள் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு ஊதியம் வருவதில் எந்த சிக்கலும் இல்லை. பலமுறை ஊதியம் வழங்கவில்லை என கோரியும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். கடந்த ஒரு வருடங்களாக குடும்ப செலவை சமாளிக்க முடியாமலும், 100 நாள் சம்பளமும் வழங்காததால் எங்களது குடும்பத்தை வழிநடத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
காவிரி குடிநீர்
கிருஷ்ணராயபுரம் தாலுகா, ஆண்டிபாளையம் கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- சின்னமநாயக்கன்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் 300-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் பன்றிகள் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசமாக்கி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, பனையம் பாளையம், கூடலூர் கீழ்பாகம் பிட்2, தொல்காப்பிய நகர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் 50 குடும்பங்கள் அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 10 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெயர் பலகை
குளித்தலை தாலுகா, தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கழுகூர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரான கழுகூரின் பெயரை பயன்படுத்தி அ.உடையாபட்டியில் உள்ள அனைத்து கடைகளிலும் கழுகூர், கழுகூர் அ.உடையாபட்டி, அ.உடையாபட்டி கழுகூர் என்று 3 விதமாக பெயர்பலகை வைத்துள்ளார்கள். எங்கள் ஊரை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக வைத்துள்ள தகவல் பலகையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.