கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை
கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை
வேலூர்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது, பீர் வகைகளின் விலைபட்டியல் கடையின் முன்பு வைக்க வேண்டும். பீர், மதுபானங்களுக்கு பில் வழங்க வேண்டும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அவற்றை நடைமுறைப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 114 டாஸ்மாக் கடைகளிலும் விலைபட்டியல் வைக்கவும், பீர், மதுபானங்களுக்கு பில் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் கோட்ட டாஸ்மாக் மேலாளர் கீதாராணி வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் மது, பீர் வகைகளின் விலைபட்டியல் வைக்கப்பட்டுள்ளதா?, பில் வழங்கப்படுகிறதா?, கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்றும் பார்வையிட்டார்.
பின்னர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களிடம் பீர், மது விற்பனைக்கான பில் வழங்க வேண்டும். கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்வைப்பிங் கருவி இருந்தால் அதனை பயன்படுத்தி பணம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.