ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
கலசபாக்கம் தாலுகா சீனந்தல் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி சரோஜா. இவர் நேற்று தனது மகன் பரமசிவம், மருமகள் சுதா, பேர குழந்தைகள், உறவினர் உள்பட 8 பேருடன் திருவண்ணாமலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் மண்எண்ணெய் கேனை மறைத்து எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கையில் மறைத்து வைத்திருந்த கேனை திடீெரன எடுத்து மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு 8 பேரும் தீக்குளிக்க முயன்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது:-
சீனந்தல் கொல்லக்கொட்டாய் பகுதியில் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றோம். எங்களிடம் உள்ள 1.15 ஏக்கர் நிலத்திற்கு பட்டா உள்ளது. அந்த பட்டாவை அரசு பதிவேட்டில் பதிவு செய்து தருமாறு பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நிலத்தை மீட்டு தர வேண்டும்
இந்த நிலையில் செங்கத்தை சேர்ந்த சிலர் எங்களுடைய நிலத்தை அவர்களுடையது என்று கடந்த 4 மாதங்களாக அடிக்கடி வந்து தகராறு செய்து வருகின்றனர். இது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே எங்களது பட்டா இடத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றனர்.
இதையடுத்து அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.