கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மலைகிராம மக்கள்
ஆம்பூர் பகுதியில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி மன்றதலைவர் பதவி ஒதுக்கீடு சம்பந்தமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
ஆம்பூர் பகுதியில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி மன்றதலைவர் பதவி ஒதுக்கீடு சம்பந்தமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினர் மற்றும் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. தஹ்போது நடைபெறும் தேர்தலில் எஸ்.சி. பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.
ஒரு சிலரே உள்ள எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி அந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 ஊராட்சி வார்டுகளிலும் யாரும் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்து இருந்த தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி, அ.தி.மு.க. வேட்பாளர் இந்துமதி. சுயேச்சை வேட்பாளர் முனியம்மாள் ஆகிய 3 பேரும் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்த எஸ்.சி. பிரிவை சேர்ந்த பாண்டியன் மனைவி இந்துமதி (21) என்பவர் போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அங்கு யாரும் போட்டியிடாத நிலையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே அப்பகுதி மக்கள் ஒட்டுப் போட வேண்டும். அந்த தேர்தலை புறக்கணிக்கவும், அரசால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை அப்பகுதி மக்கள் அரசிடம் திரும்ப வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மதியம் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கலெக்டரிடம் மனு
மலைக்கிராம மக்கள் மனு கொடுக்க வந்தபோது கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. இதனால் மலைக்கிராம மக்கள் கலெக்டர் வரும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அருகில் உள்ள கூடுதல் கூட்டரங்கில் அமர வைத்தனர். கலெக்டர் 5 மணி ஆகியும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கலெக்டர் பங்களாவுக்கு செல்லப்போவாதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் தாசில்தார் 4 பேர் மட்டும் கலெக்டர் பங்களாவிற்கு வாருங்கள் என அழைத்தார். அதைத்தொடர்ந்து 4 பேர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது உங்கள் கருத்துகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மலைக்கிராம மக்கள் 4 மணி நேரத்திற்கு பின் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
அதிகாரிகள் தவறு
கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் ஒரு சில அதிகாரிகள் செய்த தவறால் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதிவு எஸ்.சி. பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அப்பிரிவை சார்ந்த யாரும் வசிக்கவில்லை. தங்களது தவறை மறைக்க அதிகாரிகள் வெளியூரை சேர்ந்த பெண்ணை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து சதி செய்து உள்ளனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும், விரைவில் மலைக்கிராம மக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ரேசன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைப்போம் என கூறப்பட்டுள்ளது.