பெண்கள் உள்பட 73 பேர் கைது
சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 73 பேர் கைது.
சிவகங்கை,
நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தின. இதையொட்டி சிவகங்கை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கபட்டு இருந்தன.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமையில் சிவகங்கை பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ்நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் வீரகாளை, எல்.பி.பி.எப். மாவட்ட தலைவர் வீரபாண்டியன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வீரய்யா, அரசு போக்கு வரத்து கழக சி.ஐ.டி.யூ. செயலாளர் சமயத்துரை மற்றும் 17 பெண்கள் உள்பட 73 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகிேயார் கைது செய்தனர்.
திருப்புவனத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் பொதுத்துறை வங்கி முன்பு சாலை மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தண்டியப்பன், அய்யம் பாண்டி, தி.மு.க. சார்பில் நடராஜன், மாரி, முருகன், ம.தி.மு.க. சார்பில் முத்திருளு, பாலமுருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், ஜெயப்பிரகாஷ் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 40 பேரை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துச்செல்வம் கைது செய்தார்.
காளையார்கோவில் பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், திருநாவுக்கரசு, விவசாய சங்க தலைவர் உடையார், மாவட்ட குழு உறுப்பினரும், கொல்லங்குடி ஊராட்சி தலைவருமான மெய்ஞான மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் பஸ் மறியல் நடந்தது. மறியலில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தேவகோட்டையில் தியாகிகள் பூங்காவில் இருந்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றிணைந்து ஊர்வலமாகச் சென்று மறியல் செய்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.
மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 27 பேர் கலந்துகொண்டு கைதாகினர்.