தர்மபுரி அருகே ஆசிரியை மாணவிக்கு கொரோனா அரசு பள்ளிக்கு விடுமுறை

தர்மபுரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.;

Update: 2021-09-27 17:38 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியை மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆசிரியைக்கு கொரோனா
தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 
அப்போது ஒரு மாணவிக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து அந்த ஆசிரியை மற்றும் மாணவி தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் வழக்கம்போல் பள்ளி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 
பள்ளிக்கு விடுமுறை
இந்த நிலையில் நேற்று இந்த பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பள்ளியில் ஆசிரியை, மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
அரசு பள்ளியில் ஆசிரியை, மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மாணவ-மாணவிகள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்