ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க ‘கிராமங்கள் செல்வோம்’ திட்டம் தொடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் ‘கிராமங்கள் செல்வோம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் ‘கிராமங்கள் செல்வோம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கிராமங்கள் செல்வோம் திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 6, 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சமூக விரோதிகள், குற்ற செயலில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கிராமங்கள் செல்வோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டர் தினசரி 10 கிராமங்களுக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையில் தினசரி 5 கிராமங்களுக்கும், போலீஸ் சூப்பிரண்டு தினசரி 3 கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவார்கள்.
குற்றச்செயல்கள்
மேலும் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றிடவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, ரோந்து முறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
போலீஸ் நிலைய அதிகாரிகள் அவர்களின் தினசரி பயணம் மற்றும் பணி குறித்த விவரத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள், காவல்துறை நல்லுறவு மேம்படுவதோடு, குற்றச்செயல்கள் நடைபெறாமல், அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.