தேனியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனியில் புலிகள் பாதுகாப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-09-27 17:13 GMT
தேனி:
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட இந்த ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு புலிகளுக்கான ஆண்டாக அறிவித்தது. இதையடுத்து ‘புலிகளுக்கான இந்தியா’ என்ற தலைப்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய புலிகள் பாதுகாப்பு குழுமத்தின் கொடி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தேனிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை அந்த கொடி கொண்டு வரப்பட்டது. 
பின்னர் அந்த கொடியுடன் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களில் வனத்துறையினர் ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் இந்த ஊர்வலம் வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக லோயர்கேம்ப் வரை சென்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தீபக் எஸ்.பில்ஜி, மேகமலை மண்டல துணை இயக்குனர் ஆனந்த், ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணை இயக்குனர் திலீப்குமார், மாவட்ட வன அலுவலர் வித்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடந்த விழாவில், உலக சுற்றுலா தினத்தையொட்டி நடத்தப்பட்ட இணையவழி கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 18 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். 
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் சிறப்பாக பணி புரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

மேலும் செய்திகள்