கோவில் திருவிழாவில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
கோவில் திருவிழாவில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.;
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி மகன் பென்னரசு (வயது 24), குமார் மகன் சிவா என்கிற வினோத் (22), விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரை சேர்ந்த பாஷா மகன் அகமதுஉசேன் (21). ரவுடிகளான இவர்கள் 3 பேர் மீதும் கண்டமங்கலம் பகுதியில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிபுதுப்பட்டு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக பென்னரசு உள்ளிட்ட 3 பேரையும் கண்டமங்கலம் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் பென்னரசு, சிவா, அகமதுஉசேன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து பென்னரசு உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.