முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரம்
கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையோரத்தில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையோரத்தில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நடைபாதை
கோவை-பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் கிணத்துக்கடவு ஊருக்குள் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் கீழ்ப்பகுதியில் சர்வீஸ் சாலை போடப்பட்டு இருக்கிறது.
இந்த சர்வீஸ் சாலை அருகே பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சொலவம்பாளையம் பிரிவு முதல் ஒன்றிய அலுவலகம் வரை நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்புக்காக கம்பி நடப்பட்டு இருக்கிறது. இது தவிர நடைபாதைக்கு கீழ் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.
விபத்தில் சிக்கும் அபாயம்
இதற்கிடையில் கிணத்துக்கடவு பஸ் நிலையம் முதல் ஒன்றிய அலுவலகம் வரை புதர் செடிகள் அதிகளவில் வளர்ந்து, நடைபாதையை ஆக்கிரமித்து இருந்தன. இதனால் அதில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சாலையில் இறங்கி நடப்பதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது.
எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் அதுகுறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.
வெட்டி அகற்றம்
இந்த நிலையில் அந்த சர்வீஸ் சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சர்வீஸ் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் ஆக்கிரமித்து உள்ள புதர்செடிகளை வெட்டி அகற்ற உத்தரவிட்டனர்.
இதையடுத்து பஸ் நிலையம் முதல் ஒன்றிய அலுவலகம் வரை சாலையோர புதர்கள் பணியாளர்களால் வெட்டி அகற்றும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.