மறியலில் ஈடுபட்ட 94 பேர் கைது

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி உடுமலையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 94 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-27 12:40 GMT
உடுமலை
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி உடுமலையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட மசோதாவையும் திரும்பப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கும் 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-ந்தேதி முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி உடுமலை குட்டைத்திடலில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, கச்சேரி வீதியில் உள்ள உடுமலை தலைமை தபால் அலுவலகம் முன்பு வந்தனர். அங்கு அவர்கள் தபால் அலுவலகத்திற்குள் சென்று விடாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஏ.பாலதெண்டபாணி தலைமையில் மறியல் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன், சி.சுப்பிரமணியம், ஏ.ராஜகோபால், சுதாசுப்பிரமணியம், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், சி.ஐ.டி.யூ. ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்டுதாலுகா செயலாளர் கே.எஸ்.ரணதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 94 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் உடுமலை ரெயில் நிலையம் முன்பு, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.அப்பாஸ், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன், தமிழர் பண்பாட்டுப்பேரவை இணைத்தலைவர் பால் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலைபோட்டு வைத்திருந்தனர்.
உடுமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. வாரச்சந்தை உள்ள ராஜேந்திரா சாலை மற்றும் கல்பனாசாலை, பழனிசாலை, கச்சேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. நகரில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் உள்ள பல்வேறு கடைகள் மதியம் வரை அடைக்கப்பட்டிருந்தன.

-

மேலும் செய்திகள்