சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம்-பொதுமக்கள் ஆர்வம்

சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Update: 2021-09-26 22:03 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 1,392 மையங்களில் 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டங்களாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 12-ந் தேதி நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 19-ந் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட சிறப்பு முகாமில் 82 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.  
இந்தநிலையில், 3-வது கட்டமாக நேற்று 1,392 மையங்களில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சேலம் மாநகராட்சி பகுதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. 
பொதுமக்கள் ஆர்வம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மையங்களில் கொரோனா தடுப்பூசி 3-வது கட்ட மெகா முகாம் நடந்தது. குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கன்னங்குறிச்சி அரசுப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த மையங்களில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்