மேட்டூர் அருகே காலாவதியான சாக்லெட்டுகளை தின்ற 3 மாடுகள் செத்தன-மேலும் ஒரு மாட்டுக்கு தீவிர சிகிச்சை
மேட்டூர் அருகே காலாவதியான சாக்லெட்டுகளை தின்ற 3 மாடுகள் செத்தன. மேலும் ஒரு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அருகே காலாவதியான சாக்லெட்டுகளை தின்ற 3 மாடுகள் செத்தன. மேலும் ஒரு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 பசுக்கள் செத்தன
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோம்பூரான்காடு பகுதியை சேர்ந்தவர் பெரமன். விவசாயி. இவருடைய மனைவி ஜெயம்மா. இந்த தம்பதியினர் 4 பசு மாடுகளை வளர்த்து வந்தனர். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை மாடுகளை அவர்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டனர். அவை அந்த பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென 4 மாடுகளும் மயங்கி விழுந்தன. அதில் 3 மாடுகள் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே பலியாகின. ஒரு மாடு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரமன், ஜெயம்மா ஆகியோர் அங்கு சென்று, செத்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதனர்.
காலாவதியான சாக்லெட்டுகள்
மாடுகள் செத்து கிடந்த இடத்தின் அருகே காலாவதியான சாக்லெட்டுகள் மற்றும் தின்பண்டங்கள் அதிகளவில் குவிந்து கிடந்தன. இதனால் மாடுகள் அவற்றை தின்றதால் பலியானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு மாட்டை சிகிச்சைக்காக மேட்டூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பலியான மற்ற மாடுகளும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
பரபரப்பு
மாடுகள் இறந்தது குறித்து ஜெயம்மா கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலாவதியான சாக்லெட்டுகளை தின்றதில் 3 மாடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.