ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் மத்தியில் கழிவு நீர் செல்லும் வாய்க்கால்கள் அனைத்தும் கருவேல மரங்களாலும், முட்புதர்களாலும் நிரம்பி உள்ளது. இதனால், அந்த பகுதியில் சாக்கடை நிரம்பி வழிகிறது. எனவே அந்த பகுதியில் கருவேல மரங்களை அகற்றுவதோடு, மழைக்காலம் வரும்முன் கால்வாயை தூர்வார வேண்டும்.
ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
குண்டும் குழியுமான சாலை
மதுரை நெல்பேட்டை தயிர்மார்க்கெட் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அடிக்கடி அந்தபகுதியில் விபத்துக்களும் நடந்த வண்ணம் உள்ளது. இதுபோல், பழமார்க்கெட் பகுதியில் இருந்து பெரியார் நோக்கி வரும் சாலையும் விபத்து பகுதியாக மாறி உள்ளது. எனவே அந்த பகுதியில் பெரிய அளவில் விபத்துக்கள் நடக்கும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.
பிரேம் குமார், சிம்மக்கல்.
மின்தடையால் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சடை முனியன் வலசை, ஏர்வாடி.
பஸ் வசதி தேவை
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையில் இருந்து அய்யர்பங்களா, ரிசர்வ் லயன், கோர்ட் வழியாக மாட்டுத்தாவணிக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக நகர் பகுதிக்கு செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், காஞ்சரம்பேட்டை.
நிழற்குடை வேண்டும்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் சேக்கிபட்டி கருப்பையா நகரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த நிலையில் இருந்த நிழற்குடை அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளாக தற்போது வரை அந்த பகுதியில் நிழற்குடை வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
முருகன், சேக்கிபட்டி கருப்பையா நகர்.
சகதியாக மாறிய சாலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, மடப்புரம் விலக்கு, அண்ணாமலை நகர், ஸ்ரீராம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை மற்றும் சாலை வசதியில்லை. அடிக்கடி பெய்யும் மழையால், மழை நீர் தேங்கி சாலையானது சகதி காடாக மாறி உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை நகர் ஸ்ரீராம்நகர், பொதுமக்கள்.
இரவு நேர பஸ் வசதி கிடைக்குமா?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் நகர் பஸ்கள், கடற்கரை சாலை வரை வருவதில்லை. முக்கியமாக இரவு 6 மணியில் இருந்து 10 மணி வரை எந்த ஒரு பஸ்சும் அந்த பகுதிக்கு வரவில்லை. இதனால், நோயாளிகள், முதியோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.
செய்யது இப்ராகிம், கீழக்கரை.
சேதமடைந்த மின்கம்பம்
காரைக்குடி கழனிவாசல் கே.கே.நகர் பகுதியில் எண்.124 மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பெரிய அளவில் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு, அதனை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜசேகரன், கே.கே.நகர்.
நாய் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகரில் தெரு நாய்கள் மற்றும் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள், வாகனத்தில் செல்லும் நபர்களுக்கு பாதிப்பாக உள்ளது. அவ்வப்போது நாய்கள், அந்த பகுதியில் வரும் நபர்களை கடித்து விடுகிறது. இதுபற்றி சாயல்குடி பேருராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.
சாயல்குடி, பொதுமக்கள்.