ஈரோடு மாவட்டத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து ரெயில்-சாலை மறியல் விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) ரெயில் மற்றும் சாலை மறியல் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) ரெயில் மற்றும் சாலை மறியல் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
கோரிக்கைகள்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் 27-ந் தேதி (இன்று) நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்திலும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் புதிய வேளாண் சட்டம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.
ரெயில் மறியல்
ஈரோட்டில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி ஆகிய 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி தெரிவித்து உள்ளார்.
இந்த போராட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச., தி.மு.க. விவசாயிகள் அணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். போராட்டத்தையொட்டி சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.