விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுகள் அணிவகுப்பு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
படகுகள் அணிவகுப்பு
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் 75-வது சுதந்திரதினத்தையொட்டி அமிர்தத் திருவிழா வணிக வார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி முறையான மீன்பிடிப்பு, வளமான எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விவேகானந்தர் பாறை வரை படகுகள் அணிவகுப்பு நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு படகுகள் அணிவகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டமானது மீனவர்களின் உழைப்புக்கும், அவர்களது வாழ்வாதாரத்திற்கும், செயல்பாடுகளுக்கும் மிகவும் பெயர்போன மாவட்டம் ஆகும். மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிக அளவில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கடலோர பகுதிகள் மற்றும் துறைமுகம் பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீனவ மக்களின் பிரச்சினை
ஒவ்வொரு மாதமும் அந்தந்த கடலோர பகுதிகளில் குழுக்கள் அமைத்து மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட்டம் நடத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தின் மூலம் மீனவ கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், மீனவர்களின் தனிப்பட்ட கோரிக்கை மற்றும் படகு உரிமையாளர்களுக்கான கோரிக்கைகள் அனைத்தும் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீன்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்பட பல்வேறு குழுக்கள் மூலமாக மீன் சார்ந்த உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டம் அதிக அளவு கடற்பரப்பு கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள மீனவர்கள் குமரி மாவட்டத்தையும் தாண்டி அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு கடலோர மாநிலங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக அளவு இடவசதி
சின்னமுட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகங்களில் அதிக அளவில் இடவசதி உள்ளது. புதிதாக மீன் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மீன்வளத்துறையின் சார்பில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீனவர்கள் அதிக அளவில் தங்களுக்குள் நேரடி தொடர்பில் இருப்பதால் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ரஞ்சித், அசோக்குமார், வினோத், ரவீந்திரன், மேரி பசில் பிந்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.