ஒரே நாளில் 71,500 பேருக்கு தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 71560 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 71560 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மெகா தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவ விடாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்துக்கு தற்போது தடுப்பூசிகள் அதிக அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதால் தினமும் ஏராளமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்களும் நடக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே 2 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
அப்போது 625 இடங்களில் நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி முகாமில் 68 ஆயிரத்து 346 பேருக்கும், 268 இடங்களில் நடைபெற்ற 2-வது மெகா தடுப்பூசி முகாம் 28 ஆயிரத்து 556 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொதுமக்கள் ஆர்வம்
இந்த நிலையில் 3-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதாவது மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என மொத்தம் 510 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில் மாநகராட்சியில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் என சுமார் 60 இடங்களில் முகாம் நடந்தது.
ஒவ்வொரு முகாமும் பொதுமக்கள் வசிக்கும் இடத்துக்கு மிக அருகில் நடைபெற்றதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் ஆர்வமாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதனால் பல முகாம்களில் பொதுமக்கள் குவிந்தனர். முகாமானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது. நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 71 ஆயிரத்து 560 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே என்.ஜி.ஓ.காலனி மினி கிளினிக், வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 3-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. முகாமில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசிடம் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் கேட்டு பெறப்பட்டது.
வடமாநில தொழிலாளர்
குமரி மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத வடமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கீடு செய்ய மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகர் நல அதிகாரி விஜய்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.