தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

தென்தாமரைகுளத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-26 20:05 GMT

தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவனம்

தென்தாமரைகுளம் அருகிலுள்ள சித்தன் குடியிருப்பை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 36). இவர் தென்தாமரைகுளம் வடக்கு பகுதியில் தண்ணீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் வடநாட்டு தொழிலாளர்கள் உள்பட அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். 
தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று சம்பளம் கொடுப்பது வழக்கம். அதே போல் சம்பளம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் ரூ.1 லட்சத்தை தன் நிறுவன அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார். அப்போது அதனுடன் ஒரு பவுன் தங்க நகையையும் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

திருட்டு

நேற்று காலை வழக்கம்போல் நிறுவனத்துக்கு ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது அலுவலக அறைக்கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 பவுன் நகையை காணவில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. 
இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை என்பது தெரிய வந்தது. திருட வந்த மர்மநபர் அலுவலக அறையை மட்டும் குறி வைத்து கதவை உடைத்து பணத்தையும், தங்க நகையையும் திருடி சென்று இருப்பதால், திருடர்கள் உள்ளூர் நபர்கள் அல்லது அலுவலகம் குறித்த விவரம் தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி வழக்கு பதிவு செய்தார். அங்கு வேலை செய்த வடநாட்டு தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்