பா.ஜ.க.வினர் சாலை மறியல்
பரமக்குடியில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் முகாமில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வைக்கப்படும் விளம்பர பதாதைகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடி ஓட்டப்பாலம் மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலைபகுதியில் பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கதி.சண்முகம் உள்பட பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாசில்தார் தமிம் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து நகர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்