வேட்பாளரின் விலகல் படிவத்தை எடுத்துச் சென்றதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 7 மற்றும் 8-வது வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அ.தி.மு.க. வேட்பாளரின் விலகல் படிவத்தை எடுத்துச் சென்றதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 7 மற்றும் 8&வது வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அ.தி.மு.க. வேட்பாளரின் விலகல் படிவத்தை எடுத்துச் சென்றதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 21 வார்டு உறுப்பினருக்கு வேட்பு மனுத்தாக்கல் நடந்தது. கடந்த 15&ந் தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 23-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 24 மற்றும் 25&ந்தேதி வாபஸ் பெறுவதற்கான நாளாகும். 25-ந்தேதி இரவு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் அம்பிகா. இவருக்கு மாற்று வேட்பாளராக ரேவதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏமாற்றி கையெழுத்து பெற்றதாக புகார்
இந்த நிலையில் கடந்த 24&ந்தேதி ரேவதியின் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்காக ரேவதியும், அம்பிகாவும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு இருவரிடமும் விலகல் படிவத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மோகன் ரெட்டி கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அம்பிகா அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்ததும் அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் நிர்வாகிகள் சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அதிகாரி அ.தி.மு.க. வேட்பாளரிடம் தான் பெற்ற விலகல் கடிதத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
இதற்கிடையில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க &அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு நடந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கட்சி நிர்வாகிகளை அறையை விட்டு வெளியேற்றினர்.
அதன்பின்ற காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்ட சுஜாதா மற்றும் 8-வது வார்டில் போட்டியிட்ட கவிதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டினர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
இந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் ரெட்டி காட்பாடி போலீஸ் நிலையத்தில் வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் 4 பேர் தன்னிடமிருந்து அ.தி.மு.க. வேட்பாளரின் விலகல் கடிதத்தை பறித்து சென்றதாக புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அமர்நாத், ஜனார்த்தனன், ஆனந்தன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.