3-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்;அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-26 17:49 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் கடந்த 12-ந்தேதியும், 19-ந்தேதியும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. நேற்று 3-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. 

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 1,017 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி முகாம்கள் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடந்தது.

 முகாமை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் 6 மண்டல அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. 

மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களை கண்காணிக்க 32 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அவர்களும் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

தடுப்பூசி போடும் பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பணியமர்த்தப்பட்டனர். அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களை தடுப்பூசி முகாமுக்கு அழைத்து வந்தனர்.

அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி, தச்சம்பட்டு, நவம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வயிட்டு ஆய்வு செய்தார். 

மேலும் அவர், காட்டாம்பூண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசால் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திட அனைத்துத்துறையின் ஒருங்கிணைப்புடன் முதல் கட்டமாக 12-ந்தேதி நடந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேரும், 2-வது கட்டமாக 19-ந்தேதி நடந்த முகாமில் 77 ஆயிரத்து 85 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) செல்வக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி, தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்