கள்ளக்குறிச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது தாக்குதல் அ தி மு க பிரமுகர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது தாக்குதல் அ தி மு க பிரமுகர் மீது வழக்கு

Update: 2021-09-26 17:43 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் சலேத்மேரி உள்ளிட்டவர்கள் மனுவை வாபஸ் பெற்றதாகவும், இதனால் தி.மு.க. வேட்பாளர் அலமேலு ஆறுமுகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். 

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் சலேத்மேரி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் அ.தி.மு.க. வேட்பாளர் சலேத்மேரி தன்னுடையை வேட்பு மனுவை நான் வாபஸ் பெறவில்லை, ஆனால் மனுவை வாபஸ் பெற்றதாக எப்படி அறிவிக்கலாம் என்று வாக்குவாதம் செய்தார். அதற்கு உங்களது பெயரை முன்மொழிந்தவர்கள் நீங்கள் கையெழுத்து போட்டு மனுவை வாபஸ் பெறுவதாக கூறி அதற்கான படிவத்தை கொடுத்ததால் வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். 

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன் சென்றிருந்த அ.தி.மு.க.வினர், அவரை திட்டினர். இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்