ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
நிலக்கோட்டை அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நிலக்கோட்டை:
காய்கறி வியாபாரி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 40). இவர் வீதி, வீதியாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி முருகேஸ்வரி (35). இந்த தம்பதிக்கு சந்தோஷ் (15) என்ற மகனும், சவுந்தர்யா (13) என்ற மகளும் இருந்தனர். முருகேஸ்வரி, சிலுக்குவார்பட்டி ஊராட்சி பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று வந்தார்.
சந்தோஷ் சிலுக்குவார்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10&ம் வகுப்பும், சவுந்தர்யா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7&ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் காய்கறி வியாபாரத்துக்கு சந்திரபோஸ் சென்று விட்டார். சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட சந்திரபோஸ், தராசை எடுத்து வரும்படி தனது மகனிடம் கூறினார்.
இதனையடுத்து பக்கத்து கிராமத்துக்கு சென்று, தராசை தந்தையிடம் கொடுத்து விட்டு சந்தோஷ் வீடு திரும்பினான். பின்னர் சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் சந்தோஷ் விளையாடினான். அதன்பிறகு அவன் வீட்டுக்குள் சென்று விட்டான்.
தாய், மகன்-மகள் தற்கொலை
இந்தநிலையில் நேற்று மதியம் சிறுவர்கள் சிலர், சந்தோசை விளையாடுவதற்கு அழைப்பதற்காக அவனது வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. விளையாட வருமாறு சந்தோசை அவர்கள் அழைத்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக சிறுவர்கள் உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது சந்தோஷ், அவனுடைய தாய் முருகேஸ்வரி, தங்கை சவுந்தர்யா 3 பேரும் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக நிலக்கோட்டை போலீசாருக்கும், சந்திரபோசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் முருகேஸ்வரி, சந்தோஷ் மற்றும் சவுந்தர்யா ஆகிய 3 பேரும் மின்விசிறி மாட்டுவதற்கான கொக்கிகளில் தனித்தனியாக கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
காரணம் என்ன?
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு பதறியடித்து கொண்டு வந்த சந்திரபோஸ், இறந்து கிடந்த மனைவி, மகன் மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் கிராம மக்கள் சந்திரபோஸ் வீட்டின் முன்பு குவிந்தனர்.
பின்னர் கிராம மக்களின் உதவியுடன் 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன், மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.