தலைவர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதை கண்டித்து உறுவையாறு கிராம மக்கள் சாலைமறியல்
உள்ளாட்சி தேர்தலில் தலைவர், கவுன்சிலர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதை கண்டித்து உறுவையாறு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லியனூர், செப்
உள்ளாட்சி தேர்தலில் தலைவர், கவுன்சிலர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கியதை கண்டித்து உறுவையாறு கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினருக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உறுவையாறு கிராம பஞ்சாயத்தில் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பஞ்சாயத்தில் பெரும்பான்மையாக மாற்று சமுதாயத்தினர் உள்ள நிலையில் கவுன்சிலர், தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலைமறியல்
இந்த நிலையில் உறுவையாறு கிராம முக்கியஸ்தர்கள் நேற்று காலை கூட்டம் நடத்தினர். அதில் வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இடஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி வில்லியனூர் & பாகூர் சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீசார் உறுவையாறு கிராமத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.