வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 42,163 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 42,163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 42,163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் 3&ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார், சினிமா தியேட்டர்கள் உள்பட 804 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர்சந்தை பகுதியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார். உழவர்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும்படி கலெக்டர் அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வு
தொடர்ந்து கலெக்டர், வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே மற்றும் ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹோலிகிராஸ் பள்ளியில் நடந்த முகாமில் 50&க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு ஒருவர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தார். மற்றவர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதைக்கண்ட கலெக்டர் அருகே உள்ள முகாம்களில் கூடுதல் ஊழியர்கள் இருந்தால் உடனடியாக வரவழைக்கும்படியும், அங்கு மற்றொரு சிறப்பு முகாம் அமைக்கவும் உத்தரவிட்டார். அதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வேறு முகாமில் இருந்த ஊழியர்களை ஆட்டோவில் வரவழைத்து, புதிய முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாநகராட்சி நலஅலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர்கள் மதிவாணன், வெங்கடேசன், வேலூர் தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர்கள் லூர்துசாமி, சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
42,163 பேருக்கு தடுப்பூசி
சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். மருத்துவக்குழுவினர் பொதுமக்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து அவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் 804 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 42, 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.