தேவர்சோலை அருகே புலி மற்றொரு பசுமாட்டையும் அடித்து கொன்றது

தேவர்சோலை அருகே புலி மற்றொரு பசுமாட்டையும் அடித்து கொன்றது

Update: 2021-09-26 16:28 GMT
கூடலூர்

தேவர்சோலை அருகே மீண்டும் அட்டகாசம் செய்த புலி, மற்றொரு பசுமாட்டையும் அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

புலி அட்டகாசம் 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன் 1 தனியார் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று தொழிலாளி சந்திரன் என்பவரை தாக்கி கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் வளர்த்து வந்த கால்நடைகளையும் கடித்து கொன்றது. இதையடுத்து தேவர்சோலை பகுதி மக்கள் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் உடனடியாக புலியை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நேற்று முன்தினம் அதே பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் மற்றொரு பசுமாட்டையும் புலி கடித்துக் கொன்றது. 

தேடும் பணி தீவிரம் 

இதைத் தொடர்ந்து 2 இடங்களில் பரண்கள் அமைத்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் புலியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் புலி அந்தப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில் இறைச்சி துண்டுகளுடன் கூடிய இரும்பு கூண்டுகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன. 
இந்த நிலையில் தேவன் 1 பகுதியில் புலியை பிடிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து புலியை பிடிப்பது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் கோட்ட வன அதிகாரி போஜல் சச்சின் துக்காராம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பொதுமக்களுக்கு தடை 

பின்னர் அப்பகுதியில் புலி பதுங்கி உள்ளதால் பாதுகாப்பு கருதி தேவன் 1 பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. மேலும் புலியை பிடிக்கும் வரை தனியார் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து கூடலூரில் இருந்து கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்சும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. 
இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, புலி அச்சுறுத்தல் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அதுபோன்று இங்குள்ள எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர்களும் வேலைக்கு செல்ல வேண்டாம். இங்கு நடமாடும் புலியை பிடிக்கும் வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.  

மற்றொரு பசுமாட்டை கொன்றது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி வரை அந்தப்பகுதியில் புலி நடமாட்டம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. அப்போது தேவன் 1 பகுதி அருகே உள்ள மேபீல்டு என்ற இடத்தில் புற்கள் மேய்ந்து கொண்டிருந்த மற்றொரு பசு மாட்டை புலி கடித்து கொன்றது. 
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொழிலாளியை கொன்ற புலி தான் பசு மாட்டை அடித்து கொன்றதா அல்லது வேறு புலியா என்பது தெரியவில்லை. இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்