கூடலூரில் இஞ்சி விலை வீழ்ச்சி
விலை வீழ்ச்சி அடைந்ததால் கூடலூரில் இஞ்சி அறுவடை செய்யாமல் விடப்பட்டு உள்ளது.
கூடலூர்
விலை வீழ்ச்சி அடைந்ததால் கூடலூரில் இஞ்சி அறுவடை செய்யாமல் விடப்பட்டு உள்ளது.
இஞ்சி பயிர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. இதை பயன்படுத்தி மே மாதம் விவசாயிகள் தங்களது நிலத்தை தயார் செய்து இஞ்சி, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுகின்றனர்.
இதில், கூடலூர், மசினகுடி, தொரப்பள்ளி, பாடந்தொரை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் இஞ்சி பயிரிடப்பட்டு உள்ளது. அது விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சிக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை கிடைத்தது.
விலை வீழ்ச்சி
ஆனால் தற்போது இஞ்சி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இஞ்சிகளை அறுவடை செய்ய தொழிலாளர்களுக்கு கூலி, போக்குவரத்து போன்ற செலவுக்கு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. இதன் காரணமாக தோட்டங்களில் விளைந்த இஞ்சியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் அப்படியே விட்டு வைத்துள்ளனர். இதனால் இஞ்சி செடிகளுக்கு இடையே களைச்செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.
இதனிடையே இஞ்சி பயிர்களை அழுகல் நோய் தாக்கி வருகிறது. எனவே அறுவடை செய்வதா? அல்லது அப்படியே விட்டு விடுவதா? என்று விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாயிகள் கலக்கம்
இது குறித்து இஞ்சி சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் கூறியதாவது:&
3 ஆண்டுகளுக்கு முன்பு இஞ்சி ஒரு மூட்டைக்கு (54 கிலோ) ரூ.10 ஆயிரம் கிடைத்தது. கடந்த ஆண்டு மூட்டைக்கு ரூ.4 ஆயிரம் கிடைத்தது. நடப்பு ஆண்டில் ஒரு மூட்டை இஞ்சி ரூ.1,800 மட்டுமே விலை கிடைக்கிறது. ஆனால் சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்து இஞ்சி பயிரிடப்படுகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தை தவிர்க்க இஞ்சியை அறுவடை செய்ய வில்லை. மேலும் வரும் ஆண்டில் நல்ல விலை கிடைத்தால் அறுவடை செய்ய வசதியாக இஞ்சி பயிர்கள் தோட்டங்களில் அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. ஆனாலும் இஞ்சிகளை அழுகல் நோய் தாக்குவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.