ரூ.29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
முத்தூர்
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.29 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பழையகோட்டை மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள் கன்றுகள் பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் சந்தை நடந்தது.
சந்தையில் திருப்பூர் ஈரோடு கரூர் நாமக்கல் கோவை திருச்சி திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர் நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள் இளம் பூச்சி காளைகள் செவலை பசு மாடுகள், மயிலை பூச்சி காளைகள் மயிலை பசு மாடுகள் மயிலை கிடாரிகள் காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதன்படி இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 124 காங்கேயம் இன காளைகள் பசு மாடுகளில் மொத்தம் 70 நாட்டு பசு மாடுகள் காளைகள் கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
ரூ.29 லட்சத்துக்கு விற்பனை
சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் மொத்தம் ரூ.29 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் கன்றுகள் மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் திருப்பூர் ஈரோடு கரூர் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்