மண்டைக்காடு அருகே தும்பு ஆலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
மண்டைக்காடு அருகே தும்பு ஆலை எந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே படர்நிலத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 58). இவர் கூட்டுமங்கலத்தில் உள்ள தனியார் தும்பு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ராஜா வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது வேலை முடிந்ததும் தும்பு ஆலையில் உள்ள எந்திரத்தை சுத்தம் செய்வது வழக்கம். அதே போல் ராஜா எந்திரத்தை சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜாவின் வலது கை எந்திரத்தின் பெல்ட்டில் சிக்கியது. இதில் அவரது கை நசுங்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனே அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து ராஜாவை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு ராஜா ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்கள். ராஜாவுக்கு ஜெயராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மகன் தினேஷ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.