ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தொழிலாளி
ஓட்டப்பிடாரம் அருகே சவரிமங்கலம் மேல நடுத்தெருவைச் சேர்ந்தவர் சாமி. இவருடைய மகன் பாலகுருசாமி (வயது 45). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் சைக்கிளில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே ராஜாவின்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, அந்த வழியாக கும்பகோணத்தைச் சேர்ந்த சிவானந்தம் மகன் சந்தனகுமார் (46) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது.
விபத்தில் சாவு
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாலகுருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்தனகுமார் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதியம்புத்தூர் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த பாலகுருசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்