மயிலாடுதுறை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு - மகனின் நண்பர்கள் 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக அவரது மகனின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆனந்தகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகன் கலியமூர்த்தி(வயது55). இவரது மகன் சிவராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான மாப்படுகை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், விஜய், கார்த்திக் ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். அப்போது சிவராஜிக்கும், மற்ற 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதனால் சிவராஜ் அங்கிருந்து தப்பி வந்தார். இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், விஜய், கார்த்திக் ஆகிய 3 பேரும் சேர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் சிவராஜ் வீட்டுக்கு சென்று வீட்டின் கதவை தட்டினர்.
சத்தம் கேட்டு வந்த சிவராஜின் தந்தை கலியமூர்த்தி கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது சிவராஜ் எங்கே என்று கேட்ட 3 பேரும் சேர்ந்து கலியமூர்த்தியை அரிவாளால் வெட்டி பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுத்த கலியமூர்த்தியின் மனைவியும் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த கலியமூர்த்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து
கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார் (20), விஜய் (20), கார்த்திக் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.