தலை துண்டித்து தொழிலாளியை கொன்ற வழக்கில் 8 பேர் கைது
திண்டுக்கல் அருகே தலை துண்டித்து தொழிலாளியை கொன்ற வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் :
தொழிலாளி படுகொலை
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரை கடந்த 22-ந் தேதி மர்ம நபர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அவருடைய தலையை அனுமந்தராயன் கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வீசி சென்றனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஷேக்தாவூத், அழகர்சாமி ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் சாமியார்பட்டியை சேர்ந்த மன்மதன் (32) என்பவரை பிடித்தனர். விசாரணையில் அவர், தொழிலாளி ஸ்டீபன் கொலை வழக்கில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே திண்டுக்கல்- வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
6 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அய்யன்கோட்டையை சேர்ந்த சங்கரபாண்டி (26), மருதீஸ்வரன் (30), தேனி மாவட்டம் கம்பம் கே.சி.பட்டியை சேர்ந்த ராம்குமார் (25), தேனியை சேர்ந்த மணிகண்ட ராஜன் (30) மற்றும் 17 வயது சிறுவன் என்றும், தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்மதன், சங்கரபாண்டி மருதீஸ்வரன், ராம்குமார், மணிகண்ட ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாக்குமூலம்
கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இன்பராஜ் உடன் சேர்ந்து சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை வாங்கி சில்லரையில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதில் கடந்த சில மாதங்களாக இன்பராஜுடன் உள்ள தொடர்பை ஸ்டீபன் துண்டித்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அனுமந்தராயன் கோட்டையில் 11 ஆயிரம் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தொடர்பாக இன்பராஜ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு காரணமாக ஸ்டீபன் இருந்துள்ளார் என நினைத்து, ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
மேலும் 2 பேர் சிக்கினர்
இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் பழனி பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் (36), சாமியார்பட்டியை சேர்ந்த அரவிந்தகுமார் (23) என்பதும், ஸ்டீபன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.