ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த 4 பேர் சிக்கினர்

திருமண தடை நீங்க மந்திரிக்கப்பட்ட காசு கொடுப்பதாக ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த 4 பேர் சிக்கினர்.

Update: 2021-09-25 20:36 GMT
மதுரை,
திருமண தடை நீங்க மந்திரிக்கப்பட்ட காசு கொடுப்பதாக ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த 4 பேர் சிக்கினர்.
புகார்
ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு(வயது 39). இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே தனக்கு திருமணம் நடப்பதற்காக பல்வேறு நபர்கள் தெரிவிக்கும் ஜோசியம், பரிகாரம் என பல்வேறு செயல்களை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் முகநூல் மூலம் அவருக்கு நண்பர் ஒருவர் பழக்கமானார். அவர் தனக்கு தெரிந்த சாமியார்கள் திருமண தடை நீங்க பரிகாரம் செய்த ராமர் பட்டாபிஷேக காயினை கொடுக்கிறார்கள். 
அதனை வாங்கி வைத்து பூஜை செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தப்படி பிரபு தனது தாயாருடன் மதுரைக்கு வந்து தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு தேனியை சேர்ந்த ராமச்சந்திரன், தமிழரசன், மணி, சரவணன் ஆகியோர் அவரை சந்தித்து திருமண தடை நீங்கும் ராமர் பட்டாபிஷேக காசு கொடுத்தனர். அதற்கு அவரிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டனர். பின்னர் அவர்கள் பிரபுவிடம் பல்வேறு காரணங்களை தெரிவித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தார்.
கைது
இதற்கிடையில் அவர்களில் 2 பேர் ஆரப்பாளையம் பகுதியில் பணத்தை பிரித்து கொள்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கிருந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது, பிரபுவிடம் பணத்தை மோசடி செய்து பணத்தை பிரிப்பதில் தகராறு என்பது தெரியவந்தது. பின்னர் திடீர்நகர் போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். 

மேலும் செய்திகள்