ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை
கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு: பெங்களூரு அருகே உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படுகிறது. அந்த ஆஸ்பத்திரிக்கான கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சிறப்பான முறையில் செயல்பட்டது. டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். ஒரே ஆண்டில் புதிதாக 40 ஆயிரம் படுக்கைகள், 4 ஆயிரம் ஐ.சி.யு. படுக்கைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மக்களின் உயிர்கள் காக்கப்பட்டன. இத்தகைய கடினமான நேரத்தில் அரசுக்கு துணை நின்று ஒத்துழைப்பு வழங்க வேண்டியவர்கள், அரசை விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் மக்கள் வீடுகளில் இருப்பார்கள். அதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது“ என்றார்.