வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்தது

கும்பகோணம் அருகே வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்தது. இதில் காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூதாட்டியை கடித்த நரியை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.

Update: 2021-09-25 20:34 GMT
தஞ்சாவூர்:
கும்பகோணம் அருகே வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்தது. இதில் காயம் அடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூதாட்டியை கடித்த நரியை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
மூதாட்டியை நரி கடித்தது
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அருகே உள்ளது கல்லூர் கிராமம். இங்கு 300&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி உள்ளிட்டவை ரத்த காயங்களுடன் இறந்தும், மாயமானதுமாக இருந்து வந்தது. ஏதோ ஒரு விலங்கு கடித்து அவை இறந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் நாய் தான் கடித்திருக்கலாம் என கருதினர். இருப்பினும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்பட்டனர். 
இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் கல்யாணி(வயது 60) என்ற மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒரு நரி, மூதாட்டியின் தலை மற்றும் குரல்வளை பகுதியில் கடித்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கல்யாணி சத்தம் போட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
அவருடைய சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் நரி அந்த வீட்டிற்குள் பதுங்கிக்கொண்டது. இதையடுத்து பொதுமக்கள் கல்யாணியை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். நரி கடித்ததில் மூதாட்டி காயம் அடைந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கும்பகோணத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. உடனடியாக மூதாட்டி கல்யாணிக்கு அவசர சிகிச்சை நிபுணர் சுரேஷ்குமார், டிரைவர் நீதிபதி உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தார். அதைத்தொடர்ந்து கல்யாணியை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நரியை அடித்து கொன்றனர்
பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த நரியை விரட்ட முயன்றனர். அப்போது நரி அவர்களை கடிக்க பாய்ந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட பொதுமக்கள் நரியை அடித்துக்கொன்றனர். இது குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து நரியின் உடலை எடுத்துச்சென்றனர். 
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்