ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் சாவு

அம்மாப்பேட்டை அருகே 2 மாணவிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-09-25 20:31 GMT
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே 2 மாணவிகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
2 மாணவிகள் 
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் செண்பகாம்பாள்புரம் ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்த குமார் மகள் ரூபிதா(வயது 13).  அதே பகுதியை சேர்ந்த நீலமேகம் மகள் கவுசிகா(13). இவர்கள் 2 பேரும் செண்பகாம்பாள்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வந்தனர். 
நேற்று காலை 11 மணி அளவில் ரூபிதாவும், கவுசிகாவும் செண்பகாம்பாள்புரத்தில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர். ரூபிதா ஏரியில் கால் கழுவி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி ஏரிக்குள் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கினார். 
ஏரியில் மூழ்கி சாவு
அதைப்பார்த்த கவுசிகா, ரூபிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் ஏரியில் மூழ்கினார். இருவரும் ஏரியில் மூழ்கினர். அப்போது அந்த பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் அதைப்பார்த்து அங்கு ஓடிவந்தனர். பின்னர் ஏரியில் மூழ்கிய 2 மாணவிகளையும் ஏரிக்குள் இறங்கி தேடினர். அப்போது 2 சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 சிறுமிகளின் உடல்களையும் அந்த பகுதி பொதுமக்கள் மீட்டனர். 
உடல்களை தர மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த மாணவிகள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது சிறுமிகளின் உறவினர்கள் உடல்களை தர மறுப்பு தெரிவித்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செண்பகாம்பாள்புரம் ஏரிக்கரை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் கால்நடைகள், மனிதர்கள் ஏரிக்குள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எனவே ஏரிக்கரையை பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர். 
சோகம் 
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீசார், இறந்த சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்