நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்து சென்ற கைதி தப்பி ஓட்டம்
வேலூரில் நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற கைதி தப்பி ஓடினார். அவரை, 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
வேலூர்
வேலூரில் நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற கைதி தப்பி ஓடினார். அவரை, 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு
வேலூரை அடுத்த வெட்டுவாணம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி (வயது 23). இவர் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் குட்டியை கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சத்துவாச்சாரியில் உள்ள நீதிபதி குடியிருப்பில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது குட்டி, போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குட்டியை சத்துவாச்சாரி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
பிடிபட்டார்
இதற்கிடையே, வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கொணவட்டம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய குட்டி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை, போலீசார் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.