இண்டூர் அருகே சில்லி சிக்கன் கடன் தர மறுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை கட்டிட மேஸ்திரி கைது
இண்டூர் அருகே சில்லி சிக்கன் கடன் தர மறுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே சில்லி சிக்கன் கடன் தர மறுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் அண்ணாதுரை (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவரது கோழிக்கடையில் சில்லி சிக்கன் தயாரித்து தரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இவர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சோளப்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுந்தரம் (30) என்பவர் கடைக்கு வந்து சில்லி சிக்கனை கடனாக தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அண்ணாதுரை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
பின்னர் சுந்தரம் கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். இதை அண்ணாதுரை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் வயிறு மற்றும் கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த கடை உரிமையாளர் சரஸ்வதியையும் அவர் தாக்கி உள்ளார்.
கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அண்ணாதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிட மேஸ்திரி கைது
இதுகுறித்து இண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி சுந்தரத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.