போலீசாருக்கு சித்த மருத்துவ முகாம்
நெல்லையில் போலீசாருக்கு சித்த மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் நேற்று போலீசாருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்&ஒழுங்கு) சுரேஷ்குமார் முகாமை தொடங்கி வைத்து, சித்த மருத்துவத்தின் பலன்களையும் அடுத்து வரக்கூடிய கொரோனா 3&வது அலை தாக்கம் குறித்தும், அதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்.
நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசியர்கள் கோமளவல்லி, ஜஸ்டஸ் ஆண்டனி, சுபாஷ் சந்திரன், உமா கல்யாணி, வானமாமலை மற்றும் சித்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரத்த கொதிப்பு பரிசோதனை மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
இதில் சித்த மருத்துவ நன்மைகள் பற்றியும், உடல்நிலைக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்ட போலீசாருக்கு அதற்கேற்றார்போல் சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் ஆயுதப்படை உதவி கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.