கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி நகைகளை திருப்பிக்கொடுக்க வேண்டும்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி நகைகளை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2021-09-25 19:07 GMT
திருப்பூர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கி நகைகளை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டுறவு கடன் சங்கங்கள்
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்&கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண் இணை இயக்குனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனு அளித்து பேசியதாவது:
கண்டியன்கோவில் ஊராட்சி தலைவர் கோபால்:-
தமிழக அரசால் கடந்த 31-3-2021 தேதி வரை நிலுவையில் இருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஒரு சில இடங்களுக்கு விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது. அதன்பிறகு வந்த புதிய அரசால் மீண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு பசலையில் அடங்கல் பெற்றால் கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது புதிதாக சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் கடன் பெற முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. முதல்&அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, அடங்கல் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டது. அதுபோல் மீண்டும் தளர்வு செய்து வழங்க வேண்டும். கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு அடமானம் வைக்கப்பட்ட நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை நகைகளை திரும்ப வழங்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கிவிட்டதால் அமராவதி அணை, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவுப்பணியை தொடங்கி விட்டார்கள். ஆனால் யூரியா உரம் கிடைப்பதில்லை. உரக்கடையில் யூரியாவுடன் ஏதாவது ஒரு இடுபொருள் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி.தண்ணீர் திருட்டு
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:&
அனைத்து கூட்டுறவு கடன் சங்கத்தில் பழைய உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கூட்டுறவு சங்கத்தில் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் அருகில் தென்னை மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் நிறுவனங்கள் 150 உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு திருட்டுத்தனமாக 3 கோடி லிட்டர் தண்ணீரை பெரிய குட்டைகள் அமைத்து தேக்கி வைக்கின்றன. இதனால் கடைமடை விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கடன் தள்ளுபடி சான்றிதழ்
உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி:
பழைய அமராவதி பாசன வாய்க்கால் மண் வாய்க்காலாக உள்ளது. அதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றதற்கு அடங்கல் சான்று கேட்கிறார்கள். அதுபோல் புதிய விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள். இதை முறைப்படுத்த வேண்டும். வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலங்கியம் பகுதியில் அரசு கால்நடை டாக்டர் இல்லாமல் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. 
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்:-
தமிழக அரசால் கூட்டுறவு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான உழவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழும், பயிர்க்கடனுக்காக பெறப்பட்ட நகையும் திருப்பி அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடி சான்றிதழ் உடனடியாக வழங்கி நகைகளை உடனடியாக திரும்பிக்கொடுக்க வேண்டும்.  சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக கிலோவுக்கு ரூ.35 நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். 
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு பிறகு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் அதிகப்படியான விவசாயிகள் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்