காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருப்பதை உணர்த்தியுள்ளது- கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
தேவகோட்டை கட்சி கூட்டத்தில் நடந்த மோதல் காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருப்பதை உணர்த்தியுள்ளது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்.;
சிவகங்கை,
கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடந்த மோதல் கட்சி உயிரோட்டமாக உள்ளது என்பதை உணர்த்தி உள்ளது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பதவிக்கு போட்டி இருக்கும். சில சமயங்களில் போட்டி கடுமையாக இருக்கும். கட்சியின் மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக உள்ள புகார் அகில இந்திய அளவில் கூட உள்ளது. காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகளாக இருக்கும் கட்சி. அது இன்னமும் உயிரோட்டமாகத்தான் உள்ளது. இன்னும் 125 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த கட்சி உயிரோட்டமாகத்தான் இருக்கும். பிரதமர் மோடியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் எடுத்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்று விட்டது. இப்போதுதான் உலக பொருளாதாரமே மீண்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முன்பு இருந்த நிலைமை மீண்டும் வருமா? என்பது கேள்விக்குறிதான். இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதில் எங்கள் ஆலோசனைகளை ஏற்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. மாநில அரசு அமைத்தது போல மத்திய அரசும் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.