ஊரக உள்ளாட்சி தேர்தல்:வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர்,
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதியும், மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் காலி பதவிகளுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி, 22-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 22 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 11 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 28 பேரும் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
5 பேர் போட்டியின்றி தேர்வு
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 23-ந் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஒருவரது மனு மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனுதாக்கல் செய்திருந்த 2 பேர் மனு என 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்கள் திரும்ப பெற நேற்று கடைசி நாளாகும். இந்தநிலையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி ராஜேஷ், கடவூர் ஊராட்சி ஒன்றியம், வடவம்பாடி, வார்டு எண்-8: பெ.மீனாட்சி, கடவூர் ஊராட்சி ஒன்றியம், காளையாப்பட்டி, வார்டு-2: க.நதியா, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், லிங்கம நாயக்கன்பட்டி, வார்டு-1: எம்.கமலா, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் மொடக்கூர் மேற்கு வார்டு-3: ப.செல்லம்மாள் ஆகிய 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 16 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 8 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 19 பேரும் என மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.