நாராயணகவி சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

உடுமலை நாராயணகவியின் பிறந்த நாள் விழாவையொட்டி உடுமலையில், உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2021-09-25 18:55 GMT
உடுமலை
உடுமலை நாராயணகவியின் பிறந்த நாள் விழாவையொட்டி உடுமலையில், உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடுமலை நாராயணகவி
உடுமலையை அடுத்துள்ள பூளவாடி கிராமத்தில் 25.9.1899&ல் பிறந்தவர் உடுமலை நாராயணகவி. இவரது தகப்பனார் கிருஷ்ணசாமி செட்டியார். தாயார் முத்தம்மாள். உடுமலை நாராயணகவி 75&க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர். இவரது பாடல்கள் பகுத்தறிவு சிந்தனையை கொண்டதாக அமைந்தது. அதனால் இவர் பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்பட்டார்.
உடுமலை நாராயணகவியின் பிறந்தநாள் விழா திருப்பூர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், உடுமலை குட்டைத்திடலில் உள்ள உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர், மணிமண்டபத்தில் உள்ள உடுமலை நாராயணகவியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவிற்கு திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மா.சதீஸ்குமார், உடுமலை நாராயணகவியின் மகன் என்.முத்துசாமி, பேரன் வக்கீல் எம்.சுந்தரராஜன், தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முபாரக் அலி, உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன், தி.மு.க. நகர செயலாளர் எம்.மத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&
சாகித்ய ரத்னா விருது
உடுமலை நாராயணகவி பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது, தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைதோறும் முழங்கியவர். 75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதி, திரைப்பட உலகின் முடிசூடா மன்னராகத்திகழ்ந்தார்.
 இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை ஆகிய கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். 26.6.1944&ல் திருச்சியில் நடந்த அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது. இவரது பாடல்களில் கண்ணகி, மகாமாயா, கிருஷ்ணபக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல், பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 
மணிமண்டபம்
அவரது நினைவாக முன்னாள் முதல்&அமைச்சர் கருணாநிதி உடுமலை குட்டைத்திடலில் தமிழக அரசு சார்பில் உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தை கட்டி அந்த மணிமண்டபத்தை 23.2.2001&ல் திறந்துவைத்தார்.
மேற்கண்டவாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டியளித்தார்

மேலும் செய்திகள்