கள்ளநோட்டு தயாரிக்க முயன்ற 6 பேர் கும்பல் கைது

குடியாத்தம் அருகே கள்ளநோட்டு தயாரிக்க முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்காக கட்டுக்கட்டாக வைத்திருந்த காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-25 18:53 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே கள்ளநோட்டு தயாரிக்க முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் கள்ள நோட்டுகள் தயாரிப்பதற்காக கட்டுக்கட்டாக வைத்திருந்த காகிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி சோதனை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள நோட்டு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு சப்&இன்ஸ்பெக்டர் முரளிதரன்மற்றும் போலீசார் அங்கு சென்று ரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அந்த வீட்டின் மாடியில் ஒரு அறையில் ரூபாய் நோட்டு கட்டுகள் போல் 500 பேப்பர் கொண்ட 40 கருப்பு கலர் பேப்பர் கட்டுகள் இருந்தன. அப்போது அங்கிருந்த வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சரவணன் (வயது 47), விரிஞ்சிபுரத்தை அடுத்த வாழ்வான்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வேலு (42), கொல்லமங்களம் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அசோக்குமார் (30),  கல்லூரி மாணவர் தாமு (20), கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவலிங்கம் (49), கீழ் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32 ஆகியோரை பிடித்தனர்.

ரசாயன பவுடர்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. ஒடுகத்தூரை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன்,  தன்னிடம் கருப்பு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும் அதனை சில ரசாயனங்களில் தடவி எடுத்தால் 500 ரூபாய் நோட்டாக மாறும் எனவும் சுமார் 500 தாள்கள் கொண்ட 40 கட்டுகளை ஒரு கோடி ரூபாய் மதிப்பு என ஒப்பந்ததாரர் அசோக்குமாரிடம் கூறி ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு இதனை கொடுத்துள்ளார். 
மேலும் இதனை ரசாயனங்கள் மூலம் கழுவவேண்டும் என கூறி குடியாத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் மூர்த்தி ஆகியோரை அறிமுகம் செய்துள்ளார். அப்போது அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்ற ராசாயன பவுடர்களை வாங்கவேண்டும் என கூறி மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வேலூரில் இருந்து அதற்கான ரசாயனம் மற்றும் பவுடர்களை வாங்கி அசோக்குமாரிடம் கொடுத்துள்ளனர்.

போலீசாரிடம் சிக்கினர்

இந்த கருப்பு தாள்கள் கொண்ட நோட்டுகளை நல்ல ரூபாய் நோட்டாக மாற்ற குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரில் உள்ள சரவணன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் வேலு, தாமு, சிவலிங்கம், ரமேஷ் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு அவரது வீட்டில் மாடியில் வைத்து 500 ரூபாய் கருப்பு தாள்கள் என கூறிய அந்த நோட்டுகளுக்கு ரசாயனம் மற்றும் பவுடரை பூசியுள்ளனர். அது உலர்ந்த பின் அதனை மற்றொரு ரசாயன திரவத்தில் போட்டு எடுத்தால் நல்ல நோட்டாக மாறும் என கூறியதால் அதற்காக காத்திருந்து உள்ளனர் 

இந்த நிலையில்தான் போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். கருப்பு பேப்பர்கள் ரசாயன பவுடரில் கலந்து எடுக்கும் போது ரூபாய் நோட்டுகளாக மாறும் என்பது மோசடி என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த செல்போன்கள், 40 கட்டுகளில் இருந்த கருப்பு நிற ரசாயனம் தடவிய பேப்பர்களையும் போலீசார் பறிமுதல் செய்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடிக்கு மூல காரணமாக இருந்த குச்சிபாளையம் சரவணன் குமார், மூர்த்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்