நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 15 இடங்களுக்கு 63 பேர் போட்டி-10 பேர் போட்டியின்றி தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்கள் உள்பட 10 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள 15 இடங்களுக்கு 63 பேர் போட்டியிடுகின்றனர்.
நாமக்கல்:
உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் (6&வது வார்டு) பதவி, எருமப்பட்டி ஒன்றியத்தில் 15&வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 5 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி முடிவடைந்தது. மொத்தமாக 109 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், பரிசீலனையின் போது 5 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 104 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் நேற்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். அதில் 31 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. எனவே மீதமுள்ள 63 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்களுக்கான சின்னங்களும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
63 பேர் போட்டி
அதன்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 14 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 29 பேரும் போட்டியிடுகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 2 ஊராட்சி தலைவர்கள் பதவி மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 இடங்களுக்கு 63 பேர் போட்டியிடுகின்றனர்.