வீட்டின் பூட்டை திறந்து நகை, பணம் திருட்டு
அரக்கோணம் அருகே வீட்டின் பூட்டை திருந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரக்கோணம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் அஸ்வினி (வயது 29). இவரது தாய் விஜயா அரக்கோணம் அருகே அன்வர்திகான் பேட்டையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி விஜயா இறந்தார்.
அந்த துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி கொண்டு திருத்தணியில் உள்ள தனது வீட்டிற்கு அஸ்வினி சென்றார்.
மீண்டும் நேற்று அன்வர்திகான்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அஸ்வினி அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது மர்ம நபர்கள் கள்ளச்சாவி கொண்டு பூட்டை திறந்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.